கோவை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் “தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழாய்வுகள்” என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள்(27&29.09.2024) கருத்தரங்கம் நடைபெற்றது.
28.09.2024 அன்று கோயம்புத்தூர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் இந்தியத் தொல்லியல் துறையின் திருச்சி மண்டல உதவித் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் வி.ப.யதீஸ்குமார் அவா்கள் “தாமிரபரணி ஆற்றங்கரை தொல்லியல் அகழாய்வுகள்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நடைபெற்ற ஆய்வுகள் குறித்து விரிவாகப் பேசினார். பாண்டியர்களின் பழைய துறைமுகங்களாகக் கொற்கையும் அழகன்குளமும் திகழ்ந்தன என்று கூறினாா். அதற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தாமிரபரணி நாகரிகம் மிகவும் பழமையானதாகும். ஆதிச்சநல்லூரில் கிடைத்த பல்வேறு தொல்லியல் சான்றுகளைப் பொருநை அருங்காட்சியத்தில் விரைவில் பார்க்கலாம். அதற்கான ஏற்பாடுகள் முழுமூச்சில் நடைபெற்று வருகின்றன. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலம் முறையான அறிவியல் முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் நமது நாகரிகத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள இயலும் என்று பேசினார்.
தொல்லியல் கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் கலந்து கொண்டனர். தொல்லியலில் ஈடுபாடு கொண்ட ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நா. மகாலிங்கம் தமிழாய்வு மையமும் வாணவராயர் பவுண்டேஷனும் ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாகக் கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவரையும் திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிக் களத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கொங்கல்நகரம் அகழ்வாய்வுக் களத்தை அனைவரும் பார்வையிட்டனர். ஆழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழைய பொருட்களைக் கண்காட்சியாக வைத்திருந்தனர். பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண்பானைகள், நாணயங்கள் போன்றவற்றைப் பார்க்கும் வாய்ப்பு ஆய்வாளர்களுக்குக் கிடைத்தது. கொங்கல் நகரத்தின் மற்றொரு பகுதியில் கல்படுகைகளும் இருந்தன. அந்த இடத்தில் நிகழும் ஆய்வையும் நேரில் சென்று பார்த்தனர். கொங்கல் நகரம் தொல்லியல் ஆய்வு களத்திற்குச் செல்வதற்கான ஏற்பாட்டை நா. மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் இரா. ஜெகதீசன் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.