தமிழியற் புலம் (School of Tamil)
மக்களுக்கு மிகச் சிறந்த கல்விச் சேவையை நீண்டகாலமாக வழங்கி வரும் குமரகுரு கல்வி
நிறுவனங்களின் அங்கமாக குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி திகழ்கிறது.
கோவையின் முதல் பன்முகக் கல்லூரியாக, சீரிய முறையில் செயல்பட்டு வரும் இக்கல்லூரி
பன்முகத் தன்மைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. முனைவர், ஆய்வியல் நிறைஞர் பட்ட
ஆய்வுகளை முன்னெடுத்தல், கற்றல், கற்பித்தலில் உயர்நிலையான ஆய்வுகளை
மேற்கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்தல் ஆகியவையே தமிழ்த் துறையின் முக்கிய
நோக்கமாகும்.
தொன்மையான வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட செம்மொழியாம் தமிழில்
வாய்மொழி உரைநடை, இலக்கியம் மற்றும் சங்கம் முதல் சமகாலம் வரையிலான
இலக்கிய-இலக்கண நூல்களில் ஏராளமான ஆய்வுக் கூறுகள் நிறைந்துள்ளன. மனித சமூகம்
எதிர்கொள்ளும், உள்ளம் மற்றும் உடல் சார்ந்த இடர்களுக்கானத் தீர்வுகளும் ஆய்வுப்
பரப்பில் விரவிக் கிடக்கின்றன. தொன்மைமிக்க தமிழ்க்குடிக்கு வழக்காற்றியல் ஆதாரமாக,
அடையாளமாகத் திகழும் இலக்கியம் மற்றும் வாய்மொழி வழக்காறுகள் பற்றிய ஆய்வுகள்,
வரலாற்றுக்கான ஆவணப்படுத்தலாகவும் திகழ்கின்றன. நெடிய இம்மரபினைக் காக்கவும்,
தலைமுறைகள்தோறும் கடத்தவும் தமிழியல் ஆய்வுகள் இன்றியமையாதவை.
நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் உயர் ஆய்வுக்கான அங்கமாக,
அருட்செல்வர் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம் திகழ்கிறது. தமிழியல் சார்ந்த,
சர்வதேச அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ஒருங்கிணைத்தல் ஆகியவை
இம்மையத்தின் சீரிய நோக்கங்களாகும். இதனடிப்படையில், நிலவியல், தொல்லியல்,
மானுடவியல், மொழியியல், கலையியல், நவீனவியல் போன்ற பல பகுப்புகளில்
ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
உயர் ஆய்வுகளுக்கு உறுதுணையாக, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள்
அடங்கிய நூலகம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தில்
இடம்பெற்றிருப்பது சிறப்பிற்குரியது.
முனைவர் பட்ட ஆய்வுத்துறை
- தமிழியல் சார்ந்த ஆய்வுக்களங்களில், தமிழ் உயராய்வுகளை மேற்கொள்வதற்கான
சிறந்த களமாக முனைவர் பட்ட ஆய்வுத்துறை திகழ்கின்றது.
- பாரதியார் பல்கலைக்கழகத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்ட தமிழ் ஆய்வுகளை
மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கு, ஏராளமான வாய்ப்புகளும், வசதிகளும்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஒருங்கே அமைந்துள்ளன.
இவற்றின் உதவியுடன், ஆய்வாளர்கள் சர்வதேச தரத்திலான தமிழாய்வுகளை
மேற்கொள்ளலாம்.
இளங்கலைத் தமிழ் (படைப்பாக்கம்)
இளங்கலைக் கல்வியில் (B.A) புதுமை காணும் நோக்கில் தமிழ் இலக்கியத்தைக் கற்கவும்,
மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளவும்
இளங்கலைத் தமிழ்
(படைப்பாக்கம்) என்ற பாடப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
- இளங்கலைத் தமிழ் (படைப்பாக்கம்) பயிலும் மாணவர்கள் மொழியறிவை
வளர்த்துக் கொள்வதுடன் பல்வேறு துறைகளில் திறனை மேம்படுத்திக் கொள்ளும்
வகையில், ஒவ்வொரு பருவத்திலும் பல துறை சார்ந்த பாடங்களைப் பயில்வர்.
இப்பாடத்திட்டம் மற்ற பாடத்திட்டங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு
படைப்பாக்கத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து
வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தற்காலத்திற்கேற்ற சான்றிதழ்ப் படிப்புகள் கூடுதல் கல்வியாகக்
கற்றுத்தரப்படுகின்றன. பல்துறை சார்ந்த தொழில், வணிக நிறுவனங்களில்
வேலைவாய்ப்பைப் பெறுவதும், முதுகலைப் பயில்வதை ஊக்குவிப்பதும் இதன்
நோக்கங்களாகும்.
- மாணவர்கள் நாளிதழ், வார இதழ், மாத இதழ் உள்ளிட்ட பத்திரிகைகள்,
தொலைக்காட்சி நிறுவனங்கள், யூடியூப் உள்ளிட்ட மின்னணு சமூக ஊடகங்கள்,
விளம்பர நிறுவனங்கள், அரசியல் வியூக நிறுவனங்கள், இணையம், பதிப்புத்துறை,மொழிபெயர்ப்பு, சொல்லாடல் அரங்குகள், திரைப்படம், தொலைக்காட்சி, சமூக
ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
- எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஊடகவியலாளர், திரைக்கதையாசிரியர்,
வசனகர்த்தா, கவிஞர், பாடலாசிரியர், விளம்பர எழுத்தாளர், நிகழ்ச்சித்
தொகுப்பாளர், மொழிபெயர்ப்பாளர், மக்கள் தொடர்பாளர் எனப் பல துறைகளில்
மிளிரவும், சமூக ஊடகங்களில் பிரபலமாகவும் இளங்கலைத் தமிழ் (படைப்பாக்கம்)
என்ற இந்தப் பாடத்திட்டம் உதவும். உயர்கல்வியைத் தொடர விரும்புவோர்,
தமிழில் முதுகலை (M.A) பயிலலாம்.